பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த மே மாதம் 26–ந் தேதி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்களும், 22 ராஜாங்க அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சில அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை பொறுப்பேற்றுள்ளதால், புதிய அமைச்சர்களை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
முதல் முறையாக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சராவது உறுதியாகி விட்டாலும், அவருக்கான துறை எது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், நிதியமைச்சர் அருண் ஜேட்லி வசம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் பாதுகாப்புத்துறை மனோகர் பாரிக்கரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா, இளைஞர் பிரிவு தலைவர் அனுராக் தாகூர், ஹரியானா ஜாட் தலைவரான விரேந்தர் சிங் ஆகியோர் அமைச்சராகலாம் என தெரிகிறது. பீகாரைச் சேர்ந்த கிரிராஜ் சிங், ராஜஸ்தானில் இருந்து சோனாராம் சவுத்ரி, கஜேந்திர சிங் ஷெகவா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களான நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சிலர் கேபினட் அமைச்சராகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.