சென்னை இராயபுரத்தில் குடிநீரில் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி

இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு பகுதிகளி்ல் கடந்த இருபது நாட்களாக வீடுகளில் உள்ள குழாய் மூலம் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு சங்கம் மூலமாக (எச்எப்எஸ்) புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்திற்கு படையெடுத்தனர்.

அங்கு குடிநீர் வாரிய உயர் அதிகாரியை சந்தித்து முறையிட்டு மனு அளித்தனர். இதற்கு பதிலளித்த அலுவலர் இன்னும் இரண்டு நாட்களில் கழிவு நீர் கலக்காத வண்ணம் குடிநீர் ஏற்பாடு செய்து விடுவதாகவும் அது வரை அப்பகுதியில் லாரி மூலமாக குடிநீர் தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் ஆண்களும், பெண்களும் சாலையில் நின்று கழிவு நீர் கலந்த குடிநீர் பாட்டில்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுதொடர்பாக மக்கள் கூறியதாவது, இந்த கழிவு நீர் பாதிப்பால் பெரும்பாலான வீடுகளில் உள்ள பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லையெனில், இதே நிலை நீடித்தால் மீண்டும் ஒரு மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறினார்கள்.

படமும், தகவலும் “ஜீனியஸ் ” கே.சங்கர்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …