மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் தேடுதல் சில வருடங்களாவது எடுக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த விமானத்தின் காணாமற் போன பெரும்பான்மை சீனப் பயணிகளின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமக்கு உறுதியான பதில் தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் சீனாவின் பீஜிங்கில் MH370 பயணித்த தமது குடும்பத்தினர் குறித்த தகவலுக்காக ஹோட்டலில் காத்திருந்த இந்த உறவினர்கள் சீனாவுக்கான மலேசியத் தூதுவரை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியதால் தமது ஹோட்டலில் இருந்து பீஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் வரை பேரணியாகச் சென்று தூதரகம் முன்னால் இரவு முழுவதும் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சிங்கப்பூரின் Straits Times பத்திரிகை செய்தி வெளியிடுகையில் எண்ணிக்கை தெரியாத மலேசிய விமானப் பயணிகளின்ம் குடும்ப உறுப்பினர்களில் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகத் தெரிவித்துள்ளது.
போயிங் 777 ரக இவ்விமானம் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிப் பயணித்த போது 150 இற்கும் அதிகமான சீனப் பயணிகள் உட்பட 239 பேருடன் மாயமாகி 48 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னமும் உறுதியான ஒரு சிறு தடயம் கூடக் கிடைக்கவில்லை என்பதால் சீன மக்களின் கோபம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சீன அரசு MH370 விமானப் பயணிகளின் உறவினர்களை தமது உணர்வுகளை சட்ட ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் மாயமான விமானத்தின் பாகங்களைத் தேடி வரும் அவுஸ்திரேலியாவின் Bluefin-21 நீர்மூழ்கிக் கப்பல் 95% வீதமான கடற்பரப்பில் தேடுதல் வேட்டையை நிறைவு செய்த போதும் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது தேடுதல் பணி குறித்து மலேசிய அரசு முதற்கட்ட அறிக்கையை ஐ.நா சபைக்கும் சர்வதேச சிவில் ஏவியஷன் அமைப்பான ICAO இற்கும் அளித்துள்ள போதும் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. மேலும் மலேசியப் பிரதமர் நஜீப் ரஷாக் CNN ஊடகத்துக்குப் பேட்டியளிக்கையில் அடுத்த வாரம் இந்த முதற்கட்ட அறிக்கை பொதுமக்களுக்கு காண்பிக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.