எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான விண்ணப்பங்களை மே 14-ம் தேதி முதல் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு, மே 9-ம் தேதி வெளியாகிறது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ்
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் 383 இடங்கள், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 85 சதவீதம் 2,172 இடங்கள் மாநில அரசின் மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள 12 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 1,560 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 646 இடங்கள் போக, மீதமுள்ள 914 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆண்டு புதிதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்தும், கணிசமான இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்க உள்ளன.
பிடிஎஸ் படிப்பு
இவை தவிர சென்னையில் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் (15) மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், 18 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் 900-க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.
2014-15-ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை மே 14-ம் தேதி முதல் விநியோகிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை காணலாம்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மே 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, ஒரு வாரம் கழித்து 14-ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மருத்துவக் கல்லூரிகளிலேயே விற்பனை செய்யப்படும்.
இதற்காக சுமார் 30 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான முறையான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
மற்ற மாநிலங்களில் படிக்க
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு மருத்துவப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் 15 சதவீதம் இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (மத்திய அரசுக்கு) தரவேண்டும். ஒரு மாநிலத்தில் உள்ள மாணவ, மாணவிகள், மற்றொரு மாநிலத்தில் சென்று படிக்க விருப்பப்பட்டால் அகில இந்திய நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
ஜிம்பர், எய்ம்ஸ்
இவை தவிர புதுச்சேரியில் ஜிம்பர், டெல்லியில் எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐ, புனேவில் ராணுவ மருத்துவக் கல்லூரி என மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் இருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ளவர்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைனிலும் விண்ணப் பிக்கலாம்.
மேலும் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பங்களை பெறலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.