வாரணாசி: அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலம் தேர்தல் ஆணையத்தால் திடீரென சோதனை செய்யப்பட்டுள்ளது.
‘AAP ki Kranti என்ற பெயர் கொண்ட செய்தித்தாள்கள் 60 லட்சம் பிரதிகளை கேஜ்ரிவால் தனது சிவாஜிநகர், வாரணாசி கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளார் என்று பாஜக பிரமுகர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிரடியாக கேஜ்ரிவால் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால் அங்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் பத்திரிகை பிரதிகள் மட்டுமே இருந்தன. தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி 2 லட்சம் பிரதிகளை வினியோகிக்க உள்ளதாக கூறி அனுமதி பெற்றிருந்ததால் இது விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் பிரேமா கூறுகையில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. நரேந்திரமோடி வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது டி-சர்ட், சேலைகள் வினியோகிக்கப்பட்டன. அதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் மீது அளிக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.