சமீபகாலமாக சில கம்பெனிகளின் பெயர் பொறித்த சீருடையில் வரும் மர்ம நபர்கள் கேஸ் சிலிண்டர்களை திருடி சென்றுவிடுகின்றனர். ‘கம்பெனியில் இருந்து வருகிறோம். கேஸ் கசிவு உள்ளதா என செக் செய்ய வேண்டும்” என்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பரிசோதித்துவிட்டு, சிலிண்டரில் லீக்கேஜ் உள்ளது. கம்பெனிக்கு எடுத்து சென்று சரி செய்து தருகிறோம் என கூறி, கேஸ் உள்ள சிலிண்டரை கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால், திரும்பி வருவதில்லை. சந்தேகப்பட்டு விசாரித்தால், அப்படி யாரையும் அனுப்பவில்லை என ஏஜென்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், உங்களுக்கு கேஸ் வந்துள்ளது, வண்டி சற்றுதொலைவில் உள்ளது. காலி சிலிண்டரை கொடுங்கள், எடுத்து வருகிறேன் என வாங்கி சென்று எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். வட சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்மட்டும் இப்படி 23க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. சீருடையில் இருப்பதால் பெண்களும் நம்பிவிடுகின்றனர். ஏமாற்றுபவர்கள் ஒருநாள் சென்ற பகுதிக்கு மறுநாள் செல்வதில்லை. இதனால் அவர்களின் ஏமாற்றுவேலை தொடர்கிறது.
இது குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன ஏஜென்சி உரிமையாளர் கூறுகையில், ‘வழக்கமாக வருபவர்களை தவிர, புதிதாக யாராவது கேஸ் சிலிண்டர் செக்கப் செய்யவோ, காலி சிலிண்டர் கேட்டு வந்தாலோ கொடுக்கக் கூடாது. சீருடையில் இருந்தாலும் சந்தேகம் வந்தால் உடனடியாக ஏஜென்சிக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். கேஸ் நிரம்பியிருக்கும் சிலிண்டரை கூட திருடி கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் வந்துள்ளது. பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.