அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடல்களை ரஷ்யாவும், பிரிட்டனும் ஒலிப்பதிவு செய்ததாகவும் அந்த ஒலிப்பதிவு நாடாவை இஸ்ரேல் பிரதமர் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாகவும் புதிய புத்தகம் ஒன்று உரிமை கோரியுள்ளது.
‘வீக்லி ஸ்டான்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் டானியல் ஹால்பரால் எழுதப்பட்ட ‘கிளின்டன், இன்க்’ என்ற நூலே இவ்வாறு உரிமைகோரியுள்ளது.
மொனிக்கா லிவின்ஸ்கியின் ஆலோசகர்கள் குழுவால் தொகுக்கப்பட்டிருந்த கோப்புகளையும் மொனிக்கா லிவின்ஸ்கி மற்றும் ஏனைய பெண்களுடனான பில்கிளின்டனின் பதிவு செய்யப்பட்ட பாலியல் ரீதியான உரையாடல்களையும் அடிப்படையாக வைத்தே டானியல் ஹால்பர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த பாலியல் ரீதியான உரையாடல்களை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹு, இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட அமெரிக்கரான ஜொனாதன் போல்லார்ட்டை விடுதலை செய்வதற்கு பில் கிளின்டனை தூண்டுவதற்கான கருவியாக பயன்படுத்தியிருந்ததாக அந்தப் புத்தகம் கூறுகிறது.
1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் அமெரிக்க மேரிலான்ட்டில் பில் கிளின்டனுக்கும் நெட்டான்யாஹுவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இஸ்ரேலியர்கள் மொனிக்காவுடனான பாலியல் உரையாடல்களை உள்ளடக்கிய மேற்படி ஒலிப்பதிவுகளை இஸ்ரேலியர்கள் வைத்துள்ளதாகவும், ஜொனாதன் போல்லார்ட்டை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை கிளின்டன் மேற்கொள்ளும் பட்சத்தில் அந்த ஒலிப்பதிவு நாடாக்களை அழித்துவிடுவதாகவும் தெரிவித்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பில் கிளின்டன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவினரின் கோபத்திற்கு ஆளாக விரும்பாததால் ஜொனாதன் போல்லார்ட்டை விடுதலை செய்யும் தனது முயற்சியிலிருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.மொனிக்காவுக்கும் பில்கிளின்டனுக்குமிடையிலான பாலியல் உரையாடல்கள் வெளிநாடுகளால் உளவு பார்க்கப்பட்டது மட்டுமல்லாது, அந்த உரையாடல்கள் தொடர்பில் மொனிக்காவும் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பில்கிளின்டனுக்கும் தனக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் உரையாடல் தொடர்பில் மொனிக்கா தனது நண்பியொருவருக்கு விபரித்துள்ளார்.அத்துடன் பில் கிளின்டனுக்கும் வேறு பல பெண்களுக்கும் இடையில் இருந்த பாலியல் தொடர்புகள் குறித்தும் அந்தப் புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ளது