தெலுங்கானா மாநிலம் நாக்காலாகுட்டாவில் கவிஞர் காலோஜி நாராயணராவின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் மாலை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தெலுங்கானா மாநிலத்தை அவமதிப்பர்வகள் பூமிக்கடியில் 10 அடி ஆழத்தில் புதைக்கப்படுவார்கள். தெலுங்கானா மாநிலத்தை அவமதிக்கும் மீடியாக்களை மண்ணில் புதைப்போம் என்று கூறினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்திர சேகரராவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேனுகா சவுத்ரி, முதல் அமைச்சர் நிதானமாக இருக்க வேண்டும். ஆணவம் கொண்ட சந்திர சேகரராவுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் தெலுங்கானா உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு டி.வி. சேனல்கள் தெலுங்கானாவில் ஒளிபரப்பாவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதற்கிடையே ஆட்சேபணைக்குரிய நிகழ்ச்சிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பாக டி.வி. சேனலுக்கு எதிராக சட்டசபைத் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கானா சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.