ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு நடத்தும் இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அக்டோபர் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இங்கு 225 பேருக்கு முழு நேரமாகவும், 100 பேருக்கு பகுதி நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கு பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதி அனைத்தும் இலவசம். பொதுப்பிரிவினர் பயிற்சி கட்டணமாக ரூ.1000 மட்டும் செலுத்த வேண்டும். முழு நேர பயிற்சியில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், பகுதி நேர பயிற்சியில் வார நாட்களில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் முழு நேரமும் வகுப்புகள் நடத்தப்படும்.
இப்பயிற்சியில் சேர ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 21 முதல் 32-க்குள்இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வயது வரம்பு 35. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37. மாற்றுத்திறனாளிகளுக்கு 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக நவம்பர் 23-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத்தேர்வுக்கான விண் ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி அலுவலகத்தில் (சென்னை தவிர) கல்விச்சான்றிதழ் மற்றும் சாதி சான்று நகல்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அக்டோபர் 14-ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்ற அலுவலகத் தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.
இணையதளத்தில் இருந்து அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படாது. ஐஏஎஸ் தேர்வெழுத விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழக அரசு அளிக்கும் இலவசப் பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளுமாறு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், பயிற்சித்துறை தலைமை இயக்குநருமான வெ.இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.