மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளிடையேயான கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்து இரு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித்ஷா இன்று மும்பையில் சிவசேனா தலைவர்களுடன் நடத்துவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 15 ஆம தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விரைவில் தொகுதி பங்கீடு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று அமித்ஷா எதிர்பாக்கிறார். ஆனால் சிக்கல் தீரும் நிலையில் இல்லை. காரணம் மொத்தம் உள்ள 288 தொகுதியில் சிவசேனா 151 தொகுதி, பாஜக 130 தொகுதியில் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டன. மற்ற சிறிய கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த சிறிய கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறி வருகின்றன.
இந்நிலையில் சிவசேனா கட்சி, சிறிய கட்சிகளுக்கு பாஜக தான் சீட்டுகளை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் 150 தொதிக்கு குறையாக போட்டியிட முடியாது என்பதிலும் திட்டவட்டமாக உள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளர் தங்கள் கட்சியினர்தான் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் சிக்கல் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் சிவசேனா கட்சி தனது முடிவில் இருந்து இறங்கிவந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து உயர்மட்டக் குழுவினை கூட்டி ஆலோசனை நடத்தி பின்னர் தனது முடிவை அறிவிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.