சர்ச்சைக்குரிய கியாஸ் விலை உயர்வு விவகாரம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக் கிழமை கேட்டுக் கொண்டார். நரேந்திர மோடி ரிலையனஸ் நிறுவனதின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ராகுல் காந்திக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு மொழிகளில் கடிதத்தின் 10 கோடி பிரதிகள் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தனியார் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்துகின்றனர். அவைகளுக்கு யார் உரிமையாளர்? அவர்களுக்குகாக யார் பணம் செலுத்துகிறார்கள். நரேந்திர மோடி பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டங்களுக்கு முகேஷ் அம்பானி பணம் கொடுக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், இது உண்மையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாங்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளோம். ராகுல் காந்திக்கு எழுதுவோம்” என்று கூறிய கெஜ்ரிவால் “மோடி பிரதமர் ஆனால் முகேஷ் அம்பானி ஆட்சி செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.