இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்றழைக்கப்படும் ‘ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் இன்று நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆற்றிய உரை இந்திய அரச தொலைக் காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இந்துக்களின் நாடு என்ற கோட்பாட்டை முன் நிறுத்தும் அமைப்பு ஆர் எஸ் எஸ். நாட்டையாளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பவர்கள். ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவராக இருப்பவர்கள் வருடம்தோரும் விஜயதசமி நாளில், அந்த அமைப்பின் தலைமையகம் உள்ள நாக்பூரில் உரையாற்றுவதை வழக்கம். இந்த முறை ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வருடாந்திர உரையை இந்தியாவின் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நேரடியாக ஒளிப்பரப்பியது.
ஒரு மதசார்ப்பற்ற நாட்டின் மத்திய அரசு நிதியில் நடத்தப்படும் ஊடகத்தில் , ஆர்.எஸ்.எஸ் என்ற சர்ச்சைக்குரிய இயக்கத்தின் தலைவரின் உரையை நேரடியாக ஒளிப்பரப்பியது தவறான முடிவு என்று தெரிவித்து காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தலைவர்கள் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா, மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் நெறிமுறைகளை தகர்த்துவது போன்ற செயல் இது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு மதவெறி கொண்ட அமைப்பின் கொள்கைகளை தேசிய ஊடகத்தில் ஒளிப்பரப்புவது என்பது கண்டனத்துக்குரிய செயல் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் அங்கமாக இருந்து வந்த தூர்தர்ஷன் மற்றும் ஆகில இந்திய வானோலி ஆகியவைக்கு சுயாட்சி அளிக்க பிரசாத் பாரதி என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் நடைமுறையில் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பம் தூர்தர்ஷனில் பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், எந்தெந்த செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பதை பிரசார் பாரதி தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். அத்துடன் தனியார் சேனல்களும் ஒளிபரப்பும் ஒரு செய்திகளில் இடம்பெறக்கூடிய நிகழ்வு’ தொடர்பில் ஏன் எதிர்ப்புகள் எழுகின்றன என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் ஜிஹாத் நடவடிக்கைகள்
இதற்கிடையில் இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவரின் உரை வேறு ஒரு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் அதுவும் குறிப்பாக தமிழக மற்றும் கேரள மாநிலங்களில் ஜிஹாதிய நடவடிக்கைகளில் ஒரு திடீர் எழுச்சி காணப்படுவதாக இன்று தனது உரையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பக்வத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கும், தூர்தர்ஷனில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் உரை அரசு ஊடகத்தில் நேரடியாக ஒளிப்பரப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். அமைதியாக உள்ள சூழலில் இது போன்ற பயங்கரவாத பேச்சுக்களை தினித்து, ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரங்களை தூண்டவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ரிஃபாயீ தெரிவித்துள்ளார்.