சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
1.1.2015-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது.
இந்த மையங்களில் விண்ணப் பங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பார்கள். சிறப்பு முகாமில் ஏதேனும் சிரமம் இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் (சென்னையில் மட்டும் மாநகராட்சி ஆணையர் அலுவலகம்) செயல்படும் உதவி மையங்களை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பட்டியலுக்கு இதுவரை 44,513 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 24,182 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும், 20,331 விண்ணப்பங்கள் நேரடியாகவும் பெறப்பட்டன. இவ்வாறு பிரவீண்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.