திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார்.
திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு ஒன்றை அளித்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கமலாலயக் குளத்தின் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும். குறுவை அறுவடை செய்ய முடியாமல் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி முளைத்துள்ளன. மேலும், மழையால் சம்பா, தாளடி, நடவு, நட்டப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பாசனக் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழை நீர் வடியாமல் உள்ளது. எனவே, வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும். மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த அத்தியாவசிய பணிகளையும், நிவாரணங்களையும் திருவாரூர் தொகுதி மக்களை புறக்கணிக்காமல் செய்து தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.