அமெரிக்காவில் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனது வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த பெண், நோயால் உயிரிழப்பதை தவிர்த்து, நோயைக் கொல்லும் விதத்தில் கௌரவமான மரணத்தைத் தழுவியுள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரிட்டானி மேனார்ட் என்ற 29 வயது பெண் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் உதவாத நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.
இன்னும் 6 மாத காலமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நோயால் தான் துன்பப்பட்டு உயிரிழப்பதை விரும்பாத பிரிட்டானி, ஒரு நாளைக் குறித்து அன்றைய தினம் தான் மரணத்தை தழுவ முடிவு செய்தார்.
இதற்காக, தற்கொலைக்கு அனுமதிக்கும் சட்டம் உள்ள அமெரிக்க மாநிலமான ஒரேகானுக்கு குடிபெயர்ந்தார். அங்கு நவம்பர் 2ம் தேதி தனது குடும்பத்தினர் சூழ்ந்திருக்க, அனைவருக்கும் இணையதளம் மூலம் நன்றிகளைக் கூறிவிட்டு மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த மருந்தினை சாப்பிட்டு தனது உயிரை துறந்தார்.
உயிரிழக்கும் போது, அவர் கூறியதாவது, எனது இந்த முடிவை தற்கொலை என்று கூற வேண்டாம். ஏன் என்றால், எனது உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவுக்கும் வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. ஆனால், எனது நோய் என்னைக் கொல்ல துடிக்கிறது. எனவே, அந்த நோயால் நான் சாகாமல், அதனைக் கொன்றுவிட வேண்டும் என்பதற்காகவே மரணத்தைத் தழுவுகிறேன் என்று கூறியுள்ளார்.