மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) வழங்கப்பட வேண்டிய 50 சதவீத இடங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பாக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருந்தன.

அதில், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அகில இந்திய அளவில் இடங்களை ஒதுக்கும்போது, மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என திமுக தொடர்ந்திருந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தெரிவித்துள்ளது. அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு இடங்களை அளிக்க, தமிழக அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை, மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம், அடுத்த கல்வி ஆண்டில் இடங்களை ஒதுக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சாராத நிறுவனங்களில், மாநில அரசின் முடிவின்படி இடஒதுக்கீடு அளிப்பதில், சட்ட ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் எந்த தடையும் இல்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக்கூடாது என எந்த விதிகள் இல்லை என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …