இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார்.
ரோஹித் சர்மாவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரோகித் சர்மாவுக்கு எனது வாழ்த்துகள்.
இந்தியாவே ரோகித் சர்மாவை பாராட்டிக் கொண்டிருக்கின்றது. கிரிக்கெட் உலகமே இவரைப் பார்த்து வியந்து கொண்டிருக்கின்றது. நானும் பாராட்டுகிறேன். இந்திய அரசும் அவரைப் பாராட்டுமென்று எதிர் பார்க்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் ரன் அடித்த சேவாக், சச்சின், ரோகித் சர்மா ஆகிய மூவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை நான்கு முறை 200க்கு மேல் ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன.
அதில் ரோகித் சர்மாவே இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதிலும் இந்த முறை 264 ரன்கள் குவித்து உலக அளவில் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் இவர் தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக “பவுண்டரிகள்” அடித்தவரும் இவர் தான், அதிக “சிக்சர்கள்” அடித்தவரும் இவர் தான். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி இது எனக் குறிப்பிட்டுள்ளார்.