அண்ணா பல்கலைகழகம்: கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் டிசம்பர்’2016 முதல் அமல்

அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள கேள்வித்தாள் நடைமுறை மாற்றம், நிகழாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொறியியல் முடிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து, திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதற்காக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் 9 பேர் குழுவை பல்கலைக்கழகம் நியமித்தது. இந்தக் குழு புதிய தேர்வு நடைமுறையை உருவாக்கி, கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தது.

இந்த புதிய நடைமுறை மீது பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டதால், புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டுவர பல்கலைக்கழகம் இப்போது முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் ஆகியோர் கூறியது:

மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில் கேள்வித்தாளில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம். இப்போது கேள்வித்தாளில் ஏ, பி என 2 பிரிவுகள் இருக்கும். புதிய நடைமுறைப்படி “சி’ என்ற மூன்றாவது பிரிவைச் சேர்த்துள்ளோம். இதில் ஏ பிரிவில் வழக்கம்போல் 20 மதிப்பெண்களுக்கான 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். “பி’ பிரிவில் 65 மதிப்பெண்களுக்கு 4 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். புதிதாகச் சேர்க்கப்படும் “சி’ பிரிவில் 15 மதிப்பெண்ணுக்கு ஒரே ஒரு கேள்வி இடம்பெற்றிருக்கும். இந்தக் கேள்வியானது மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில் “அப்ளிகேஷன்ஸ் அனலைசிஸ்’, “கேஸ் ஸ்டடி’ ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

பாடங்களைப் புரிந்து படித்தவர்களால் மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற விரும்புபவர்கள் இந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். விரும்பாதவர்கள் இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிடலாம்.

இந்தப் புதிய நடைமுறை நிகழாண்டில் பி.இ. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு முதல் அதாவது 2016 டிசம்பர் மாதத் தேர்வு முதல் அமலுக்கு வர உள்ளது என்றனர்.

இதுபோல, தேர்வுத்தாள் திருத்தும் நடைமுறையிலும், காப்பி அடிக்கும் மாணவர்களுக்கான தண்டனைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …