புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர்.
இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு அணிக்கும் முழு நேர பயிற்சியாளர் தேவை. நாங்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்கிறோம், செப்டம்பர் மாதம் பயிற்சியாளர் யார் என்பது தெரியவரும்.
கடந்த சில மாதங்களாக சாஸ்திரி இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார். அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். வீரர்களும் அவரைப்பற்றி நல்ல கருத்துகளையே தெரிவிக்கின்றனர். எனவே முழு நேர பயிற்சியாளர் தேவையா என்பதை முடிவெடுப்போம், இந்திய அணியுடன் 10 பேர் செல்ல முடியாது.
எனவேதான் சச்சின், லஷ்மண், கங்குலி அடங்கிய ஆலோசனைக் குழுவிடம் இந்த முடிவை விட்டுள்ளோம். பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், முழுநேர பயிற்சியாளர் என்று எத்தனை பயிற்சியாளர்கள் தேவை என்பதை ஆலோசனைக் குழுவே முடிவெடுக்கும். அவர்கள் முடிவெடுப்பர். செப்டம்பர் மாதம் பிசிசிஐ-யிடம் வாருங்கள், தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன், என்ன முடிவு எட்டப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு உறுதியாக தெரிவிக்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்திய அணியின் தடுமாற்றம் மற்றும் பிட்ச்கள் பற்றி..
“உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான பிட்ச் பற்றி பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளுக்காக பசுந்தரை ஆட்டக்களங்களை இட்டோம். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மென்கள் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறியதைப் பார்த்தோம். இந்தியா ஏ போட்டியின் போது கூட ஸ்பின்னர்கள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். எனவே இது குறித்து சூழ்நிலைக்குத் தக்கவாறு முடிவெடுக்கப்படும்”
டி.ஆர்.எஸ். எதிர்ப்பு குறித்து…
தனிநபர்களோ, கிரிக்கெட் வாரியமோ டி.ஆர்.எஸ் முறையை எதிர்க்கின்றனர் என்பதல்ல. ஏன் 100% துல்லியமான முறை இல்லை என்று கேட்கிறோம். போட்டிகளை தோற்ற பிறகு, டி.ஆர்.எஸ். இல்லாததால்தான் தோற்றோம் என்று கூறுகிறோம், ஆனால் ஒட்டுமொத்தமாக அதன் சாத்தியம் பற்றி சிந்திக்க வேண்டும். அது 100% துல்லியமாக இருப்பதே முக்கியம். பிசிசிஐ டெக்னிகல் கமிட்டி தலைவர் அனில் கும்ளே இதனை இன்னும் மேம்படுத்த முடியுமா என்று ஆலோசித்து வருகிறார். இதில் மேம்பாடு சாத்தியமாக இருப்பின், எங்களுக்கு ஒன்றுமில்லை, டி.ஆர்.எஸ். முறையை ஏற்கலாம்” என்றார்.