1965 இல் வெளியாகிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ”மாதிரி நன்னடத்தை விதி மீறல்” என கூறி அவற்றை அகற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகிய இரு அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை கொண்ட இந்தச் சுவரொட்டிகள், திரைப்படங்களுக்கான விளம்பரம் தான் என்ற போதிலும், இவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இந்தத் திரைப்படத்தின் விளம்பரங்களை திரையரங்கு வளாகங்களுக்குள் அமைத்துக் கொள்ள முடியும் என்றும், திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப்படாது என்றும் அவர் அப்போது தெரிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பானர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து போராடும் இளைஞனின் கதையை கொண்டு 1965 இல் வெளியாகிய இந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், அப்போதே மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம். கருப்பு வெள்ளை திரைப்படமாக இல்லாமல் கலரில் உருவாகிய இந்த படத்திற்கு கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுதினார்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த இந்த படத்தை பந்துலு டைரக்ட் செய்தார்