ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாக்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் “கடந்த ஒரு ஆண்டுகளாக ஊடகங்கள் நரேந்திர மோடியின் புகழை பாடுகின்றன. குஜராத்தில் ராம ராஜ்யம் நடப்பதாகவும், அங்கு ஊழல் அழிந்துவிட்டதாகவும் கூறுகின்றன. ஆனால் குஜராத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது பற்றி எந்த ஊடகங்களிலும் செய்தி வெளியாகவில்லை. அதற்கு மாறாக நரேந்திர மோடியின் புகழ் பாடுவதற்கு காரணம், மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதே” என்று பேசினார்.
மேலும் கெஜ்ரிவால் பேசுகையில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வரும் போது நரேந்திர மோடிக்கு ஆதரவாக் செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை கமிஷன் வைத்து விசாரணை நடத்தப்படும். அப்போது மோடியின் ஆதரவு ஊடகவியலாளார்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று கூறினார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் குறித்த பேச்சு பற்றி கேஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்ததோடு, “ஊடகவியலாளர்களை எப்படி நான் பகைத்துக் கொள்வேன?” என கேள்வி எழுப்பினார்.
கேஜ்ரிவாலின் இந்த சர்ச்சை கருத்துக்கு பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.