காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இன்மர்சாட் செய்தி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும், அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அதன் அருகாமையில் இறங்குவதற்கான இடங்கள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அத்தோடு விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களிடம் இந்த தகவல்கள் கூறப்பட்டுவிட்டதாகவும், விமானத்தில் பயணித்த குடும்பத்தாரின் தனிமையை விரும்பும் எண்ணத்தினை இந்த நேரத்தில் மதிக்குமாறும் ஊடகங்களை அவர் கேட்டு கொண்டார்.
அவர்கள் தகவலுக்காக இரண்டு வாரங்களாக மனம் நோக காத்திருந்தார்கள் என்றும், இப்போது சொல்லப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு மேலும் மன வருத்தத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பாகங்களை தேடு எடுக்கும் பணியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் ஈடுப்பட்டு வருகின்றன.
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் குழுமம் சார்பாக இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்