தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை சுவேதா சௌத்ரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தென் கொரியாவின் அதிபர் பார்க் ஜூன் ஹீ முறைப்படி, ஆசியப் போட்டியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபல நடிகை லீ யங், ஆசியப் போட்டியின் ஜோதியை நிரூற்றின் அருகே கொண்டு செல்ல, அந்த நீரூற்று எரியத் தொடங்கியது. தண்ணீரில் நெருப்பு எரிவது போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த நீருற்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து தென் கொரியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நடனங்கள் நடைபெற்றன. “கங்ணம் ஸ்டைல்’ புகழ் பாப் இசைப் பாடகர் பிஎஸ்ஒய் தனக்கே உரிய பிரத்யேக பாணியில் பாடி அரங்கில் இருந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும், தென் கொரியாவில் இதற்கு முன் வெற்றிகரமாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை விவரிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதேபோல, குழந்தைகள் மற்றும் கலைஞர்களின் கண்கவர் நடனங்கள் நடைபெற்றன. விதவிதமான வாணவேடிக்கைகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் தென் கொரியாவின் கொடியை அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வீரர்கள் ஏந்தி வர, அதைத் தொடர்ந்து அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் தேசியக் கொடியை ஏந்தி முன் செல்ல, அவரைத் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகள் அணி வகுத்துச் சென்றனர்.
தொடக்க விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை போட்டிகள் நடைபெறவில்லை. சனிக்கிழமை காலை முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.