ஷாதரா தொகுதி சட்ட மன்ற பாஜக உறுப்பினர் ஜிதேந்தர் சிங் ஷன்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல மர்ம நபர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணிந்தபடி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஜிதேந்தர் வீட்டுக்கு வந்த மர்ம நபர், மூன்று முறை துப்பாக்கியால் சுட முயன்றபோதும் அவரது குறியில் இருந்து ஜிதேந்தர் சிங் தப்பினார். அவரது வீட்டு வாயில் அருகே மேல் தளப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவரைத் கொலைசெய்ய முயன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ ஜிதேந்தர் கூறியதாவது: “எனக்கு எதிரிகள் என்று குறிப்பிடும் வகையில் யாரும் கிடையாது. வழக்கமாக காலை 8 மணிக்கு மேல் என்னை பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், ஆவண நகல்களில் அத்தாட்சி கையொப்பம் பெறவும் வருவர். ஆனால், புதன்கிழமை அதிகாலையில் தலைக்கவசம் அணிந்த நபர் எனது கையொப்பம் பெற வந்தபோது ஏதோ அவசரம் எனக் கருதி அவரது ஆவணத்தைப் படித்துவிட்டு வீட்டுக்குள் செல்ல முயன்றேன். அப்போது என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரைத் தள்ளிக் கொண்டு தப்பிக்க மிகவும் போராடினேன். அதற்குள் என்னை நோக்கி மூன்று முறை சுட்டார். நான் உயிர் பிழைத்ததே அதிசயம்’ என்றார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறிய போது: “சிசிடிவி விடியோவை ஆராய்ந்தபோது துப்பாக்கியால் சுட்ட நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவருடன் மேலும் இரண்டு பேர் வந்து வீட்டுக்கு அருகே நின்றிருந்த காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனவே, அதிகாலைப் பொழுதில் இரு சக்கர வாகனத்தில் வந்ததால் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளுடன் ஒப்பிட்டு, மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். ஜிதேந்தர் வீட்டு முன் துப்பாக்கியால் சுட்டத்தில் குறி தவறிய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.