சென்னை பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு

சென்னையை அடுத்த சிறுசேரியில் மென்பொருள் பொறியாளர் உமா மகேஷ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீசார் மகேஷ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகளான உமா மகேஸ்வரி, மேடவாக்கத்தில் தங்கியிருந்து, சிறுசேரி தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி பணிக்குச் சென்ற உமா மகேஸ்வரி, அறைக்குத் திரும்பவில்லை. தகவலறிந்து சென்னைக்கு வந்த அவரது தந்தை, 14ம் தேதி கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஒன்பது நாட்கள் கழித்து சிறுசேரி சிப்காட் அருகே முட்புதரில் இருந்து உமா மகேஸ்வரியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

கொலை தொடர்பாக சிப்காட் வளாகத்தில் ஆளில்லா சிறிய விமானம் மூலம் தடயங்களை தேடும் பணி நடைபெற்றது. உமா மகேஷ்வரி காணாமல் போன வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக, கேளம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கில், கொலையாளிகள் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ராமானுஜம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கூறியுள்ளதாவது: ‘சிறுசேரி பகுதியில் 23 வயதான ஒரு பெண் கொலை செய்யப்பட்டது குறித்து பொது மக்களிடமிருந்து தகவல்களை காவல்துறை வேண்டுகிறது. 13.2.2014 அன்று இரவு 10 மணி அளவில் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வேலை முடித்து புறப்பட்ட பெண், பின்னர் காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அந்தப்பெண் அன்றிரவு பழைய மாமல்லபுரம் சாலையை (OMR) நோக்கி நடந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்கும்  பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையே முதலாவது பிரதான சாலைக்கு சற்றுத் தொலைவில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள புதர்களின் நடுவில் அப்பெண்ணின் சடலம் காயங்களுடன் 22.2.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்றதாகக் கருதப்படும் அந்நேரத்தில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் எதனையும் கண்டவர்களோ அல்லது அச்சம்பவம் குறித்து பயன்படக்கூடிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்களோ அதுகுறித்து 044-2250 2500 அல்லது 044-2250 2510 அல்லது 98410 59989 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலோ அல்லது அவர்களைப் பிடிக்க உதவும் வகையிலோ உபயோகமான தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.

முதல்வர் உத்தரவுப்படி, இவ்வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.சி.ஜ.டி.) மேற்கொள்ளும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன அதிகாரிகளுடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இரவு நேரத்தில் பணிக்கு வரும் அல்லது வீட்டிற்குத் திரும்பும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. காஞ்சீபுரம் சரகம் காவல்துறை டி.ஐ.ஜி., ஞாயிறன்று நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *