ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நடால், செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட்கணக்கில் வென்றார்.
ஒன்பது முறை இப்போட்டியை வென்றது மட்டுமன்றி, அதை தொடர்ச்சியாக ஐந்து முறையும் வென்று ரஃபேல் நடால் புதியதோர் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஆறு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் பட்டத்தை வென்றுள்ள ஸ்வீடனின் ஜார் போர்க், வெற்றிக் கோப்பையை நடாலுக்கு வழங்கினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இம்முறை தோல்வியடைந்தாலும் அப்பட்டத்தை வெல்லும்வரை தான் மீண்டும் மீண்டும் ரோலன் காரோ மைதானத்துக்கு வருவேன் என்று பரிசளிப்பு விழாவின்போது யாக்கோவிச் கூறினார்.
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை யாக்கோவிச் அவசியம் வெல்வார், அதற்கான திறமை அவரிடம் உள்ளது என்று ரஃபேல் நடால் தனது நன்றியுரையில் அவருக்கு புகழாரம் சூட்டினார்.
இன்றைய வெற்றியுடன் சேர்த்து, இதுவரை நடால் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இப்பெருமையை பீட் சாம்பிராஸுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரே இதுவரை மிகவும் அதிகப்படியாக, 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.