முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் GATE – 2015-ஆம் ஆண்டுக்கான தேர்வில் அனைத்து நடைமுறைகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். விண்ணப்பிக்க அக்டோபர் 1 கடைசித் தேதியாகும். முதுநிலை பொறியியல் படிப்பை மத்திய அரசின் உதவித்தொகையுடன் மேற்கொள்ள “கேட்’ தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்த்துக்கொள்கின்றன.
இந்தத் தேர்வை இந்த ஆண்டு கான்பூர் ஐஐடி நடத்துகிறது.
2015-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு 2015 ஜனவரி 31-ஆம் தேதியிலும், பிப்ரவரி 1, 7, 8, 14 ஆகியத் தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, இணைய வங்கிச் சேவை, கடன் அட்டை, டெபிட் கார்டு, இ-சலான் ஆகிய முறைகளில் மட்டுமே செலுத்தவேண்டும். இதுபோல், தேர்வு அனுமதிச் சீட்டையும் இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
தேர்வில் இடம்பெறும் 22 தாள்களும் ஆன்-லைன் மூலம் மட்டுமே எழுத வேண்டும்.
மேலும் விவரங்களை http://gate.iitk.ac.in/GATE2015 என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.