‘காந்தி’ படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகரும், இயக்குநருமான ரிச்சர்ட் அட்டன்பரோ ஞாயிறன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மாடிப்படியில் தவறி விழுந்ததை அடுத்து, வீல் சேரில் இருந்தே இயங்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார்.

சுமார் 60 வருடங்களாக திரைத்துறையில் நடிகர், இயக்குநர் என்ற பல்வேறு துறைகளில் பங்களிப்பைச் செய்தவர் அட்டன்பரோ.

இரண்டாம் உலகப்போர்க் கைதிகள் பற்றி சித்தரித்த ‘ப்ரைட்டன் ராக்’, ‘தெ க்ரேட் எஸ்கேப்’ போன்ற பல படங்களில் நடித்தவர் அட்டன்பரோ,

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தயாரித்த “ஜூராசிக் பார்க்” படத்திலும் அவர் நடித்திருந்தார்.

ஆனால் அவர் 1980களில் ஆரம்பத்தில் இயக்கி வெளியிட்ட இந்தியத் தேசப்பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காந்தி’ அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்துக்காக அவருக்கு இரு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், அட்டன்பரோவின் மறைவை ஒட்டி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட செய்தியில், ‘ப்ரைட்டன் ராக்’ படத்தில் அவரது நடிப்பும், ‘காந்தி’ படத்தை அவர் இயக்கிய விதத்தையும் பாராட்டி, அட்டன்பரோ திரைத்துறையின் மிகப்பெரும் நாயகர் என்று அஞ்சலி செலுத்தினார்.

‘காந்தி’ படத்தியில் காந்தியாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் பென் கிங்ஸ்லியும்,’ ஜுராஸிக் பார்க்’ பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்கும் அட்டன்பரோவின் மறைவையொட்டி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

Check Also

புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *