அம்மா உணவகங்கள் போல் குஜராத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஏழை எளியோர்கள் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வெளியூர்களில் இருந்து வந்து செல்வோர் குறைந்த செலவில் உணவருந்தி செல்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கினார்.
இங்கு மலிவு விலையில் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், உணவுகள் தரமான முறையில் இருப்பதால் ஏழைகள் மட்டுமல்லாது அலுவலகங்கள் செல்வோர், கல்லூரி மாணவர்களும், ரெயில், பஸ் பயணிகளும் அம்மா உணவகங்களுக்கு சென்று உணவு வகைளை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இங்கு உணவு தயாரிப்பதில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. அம்மா உணவகம் பொது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அம்மா உணவகங்கள் பற்றி அறிந்த மற்ற மாநிலங்களும் தங்கள் மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்க முடிவு செய்துள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான், ஆந்திர மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அம்மா உணவகங்கள் போல் மலிவு விலை உணவகங்கள் தொடங்க முடிவு செய்துள்ளன.
ஐதராபாத், ஜெய்ப்பூர், மும்பை, புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகமும் அம்மா உணவகங்களின் செயல்பாடு பற்றி நேரில் பார்வையிட்டு சென்று தங்கள் ஊர்களில் மலிவு விலை உணவகங்கள் தொடங்க முடிவு செய்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது குஜராத் மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் அம்மா உணவகம் போல் மலிவு விலை உணவகங்கள் தொடங்க முடிவு செய்துள்ளது.
குஜராத்தின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்ற ஆனந்தி பெண் பட்டேல் இதற்காக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் எஸ்.ஏ. பாண்டவ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் சென்னையில் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் செயல்படும் அம்மா உணவகங்களை பார்வையிட்டனர். உணவு தயாரிப்பு முறை, உணவங்களில் உள்ள சுகாதார வசதிகள் போன்றவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் இணை இயக்குனர் பாண்டவ் கூறுகையில், சென்னையில் அம்மா உணவகங்களை பார்வையிட்டோம். அற்புதமாக இருக்கிறது. உணவு தரமாக இருப்பதுடன் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. உணவகங்களும் நல்ல காற்றோட்ட வசதியுடன் சுகாதாரமாக இருக்கிறது. குஜராத்திலும் இதுபோல் தொடங்க திட்டமிட்டுள்ளோம். குஜராத்தில் 10 லட்சம் பேர் தொழில் பயிற்சி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். உள் கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவதற்காக வந்தோம். இங்கு கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன என்றார்.
இதேபோல் குஜராத்தில் உள்ள கல்வி நிலையங்களிலும் அம்மா உணவகங்கள் போல் மலிவு விலை கேன்டீன் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும், எங்கள் மாநிலத்துக்கு வந்து பாருங்கள் என்று நரேந்திரமோடி பிரசாரம் செய்தார்.
இதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா குஜராத்தை விட தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருப்பதாக பதில் தெரிவித்ததுடன் அதற்கான ஆதாரங்களையும் புள்ளி விவரத்துடன் வெளியிட்டார்.
இப்போது குஜராத் மாநில அரசே அம்மா உணவகத்தை பாராட்டி தங்கள் மாநிலத்திலும் மலிவு விலை உணவகம் தொடங்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.