தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் முறைகேட்டை கண்டறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் புதிய குழு அமைத்து, அந்த குழு, 2 மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அடிக்கடி பணியிட மாற்றம் செய்வது குறித்தும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
24 முறை சகாயம் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டதாலேயே சென்னை உயர்நீதிமன்றம் இது பற்றிய அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.