நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கோப்பையை தட்டி வந்தால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது.
3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ருயிம்டெவார்ட்பெட்ரிஜ் என்ற ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒரு பரிசை அறிவித்துள்ளது. அதாவது நெதர்லாந்து அணி கோப்பையை வென்று சாம்பியன் ஆனால் விண்வெளிப் பயணத்தை அது பரிசாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறியிருப் பதாவது: பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து சாம்பியன் ஆனால் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட நிறுவனம் என்ற முறையில் எங்கள் நிறுவனம் மிகுந்த பெருமையடையும். மிகப்பெரிய சாதனையை புரியும் கால்பந்து வீரர்கள் மிகப்பெரிய வெகுமதிக்கு தகுதியானவர்கள். அவர்கள் கோப்பையை வெல்லும் பட்சத்தில் அனைவரையும் விண்வெளிக்கு அழைத்து செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.