சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
சரியாக மாலை 5 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா மாலையில் தீர்ப்பளித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தீர்ப்பு விவரத்தை உணவு இடைவேளைக்கு பிறகு அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.
அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் குவிந்திருந்த 200க்கும் மேற்பட்ட அதிமுகவினரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டை சுற்றி 1 கிலோமீட்டருக்கு போடப்பட்டிருந்த 144 தடையுத்தரவு 5 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றம் அருகே இருந்த அதிமுகவினர் அனைவரையும் பெங்களூரு போலீஸார் வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்ததால் மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
காஞ்சிபுரத்தில் பேருந்து எரிக்கப்பட்டது. அதைத் தீயணைப்புப் படையினர் அணைத்தனர். யாரும் காயமடையவில்லை.
சென்னையில் பேருந்து ரத்து, சினிமா காட்சிகள் ரத்து:
மாநகரப் பேருந்து போக்குவரத்து 3 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயங்கவில்லை. இரவு நேரத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.