கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அதன் முழு உற்பத்தித் திறனை எட்டியது. சரியாக பிற்பகல் 1.20 மணிக்கு அணுஉலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்: “கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 5-ம் தேதி கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தித் திறன் 90 சதவீதத்தை எட்டிய போது, ஒரு வார காலத்திற்குள் முழு உற்பதித் திறனை எட்டும் என எதிர்பார்த்தோம். அணுஉலை உற்பத்தித் திறன் 900 மெகாவாட் எட்டிய போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் உற்பத்தி குறித்த அறிக்கையை அளித்து அடுத்த கட்டத்திற்கான அனுமதியை பெற சற்று கால அவகாசம் தேவைப்பட்டது என்றார்.