தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா புதன்கிழமை (செப்டம்பர் 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக மிகப் பிரம்மாண்டமாக தசரா திருவிழா கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினத்தில்தான். பல லட்சம் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் காணிக்கை வசூலித்து அம்மனுக்கு செலுத்துவர். இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
நிகழாண்டு தசரா திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலா துவங்கியது. 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்குப் பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.கொடியேற்றம் நிகழ்ந்ததும், ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்தனர். பால்குடம் உள்ளிட்ட நேர்ச்சைகளை அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் அக்டோபர் 3ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும்.