இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO’s Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் “மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
மங்கள்யான் வேகத்தைக் குறைப்பதற்கென்றே மங்கள்யானில் லேம் என்ற இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை 24-ம் தேதியன்று இந்திய நேரப்படி காலை சுமார் 7:17 மணிக்கு இயக்குவார்கள். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான ஆணை ஏற்கெனவே மங்கள்யானில் உள்ள கணிப்பொறியில் பதிவாகியுள்ளது. குறித்த நேரத்தில் அது ஆணை பிறப்பிக்கும்.
விண்கலம் 24-ந் தேதி காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் நீள்சுற்றுவட்டப்பாதையை அடையும். செவ்வாய் கிரகத்தின் வான்வெளி கோளப்பாதையில் மங்கள்யான் விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கு 515 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.
அந்த விண்கலத்தில் இருந்து ஆய்வு தகவல்கள் பெங்களூர், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தரைக்கட்டுபாட்டு மையங்கள் மூலம் பெறப்படும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். என்று ஏற்கனவே இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.