மங்கள்யான் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.  மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்தி‌ரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு செயல்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயல்பட்ட திரவ இயந்திரம் நொடிக்கு 22 கிலோ மீட்டர் என இருந்த மங்கள்யானின் வேகத்தை ஏறக்குறைய நொடிக்கு 2 கிலோ மீட்டராகக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வாயின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட, மங்கள்யான் விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் சரியாக 8 மணிக்கு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

460 கோடி ரூபாய் செலவில் செவ்வாயை ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட மங்கள்யானின் பயணம் வெற்றியடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இணைந்துள்ள முதல் ஆசிய நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் விண்கலம் செலுத்தப்படும் நிகழ்வை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தொலைநிலை விண்வெளிக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

குடியரசுத் தலைவர் பாராட்டு மங்கள்யான் சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மங்கள்யானின் வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சாதனையான் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேரில் வாழ்த்து: விஞ்ஞானிகளுடன் மங்கள்யான் செயல்பாட்டை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு வருகிறார். பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து மங்கள்யான் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல் முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு: செவ்வாய்க் கிரக சுற்று வட்ட பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதா கிருஷ்ணன் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு தொய்வில்லாத ஆதரவினை அளித்த மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமர் மோடிக்கும் திமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 450 கோடி ரூபாய்ச் செலவில், இந்திய விஞ்ஞானிகளால், உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும் அது. செவ்வாய்க் கிரகத்துக்கான இந்த விண்கலத்தைத் திட்டமிட்ட பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியதன் மூலம் நமது இந்திய விஞ்ஞானிகள் உலகத்தின் கவனத்தையும், ஆர்வத்தையும் அப்போதே ஈர்த்தனர். 2014 ஜுன் 12ஆம் தேதி, மங்கள்யான் விண்கலம் இரண்டாவது வழித் தடத்திற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து மூன்றாவது வழித் தடத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டது.

இன்று (24-9-2014) அதிகாலை 3 மணிக்கு இந்த விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நெருங்கியது. இன்று காலை 8 மணியளவில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் இணைக்கப்படும் மாபெரும் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்று நிகழ்ச்சி நடந்தேறியது.  செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதன் மூலம், இத்தகைய அரிய சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியத் திருநாட்டிற்கு கிட்டியுள்ளது. 

மேலும், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலை நிறுத்திய புகழும் பெருமையும் நமது நாட்டிற்குக் கிடைத்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை கூர்ந்தாய்வு செய்வதற்கான கருவிகள் மங்கல்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், அவை பற்றிய அரிய தகவல்கள் இந்தியாவுக்குக் கிடைத்து, செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆராய்ச்சியை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் நல்வாய்ப்பு பெருமளவுக்கு விரிவடைந்துள்ளது. 

வெகு சிறப்பான இத்தகைய விண்வெளி வெற்றிக்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு தொய்வில்லாத ஆதரவினை அளித்த மத்திய அரசுக்கும், குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நாசா பாராட்டு: 

மங்கள்யானின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பபான நாசா, இந்தியாவின் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், செவ்வாய் கிரகத்திற்கு வருகை தந்துள்ள இஸ்ரோவை நாங்கள் வரவேற்று வாழ்த்துகிறோம். செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனும் இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Check Also

மங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 …

Leave a Reply

Your email address will not be published.