பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முக்கிய நிகழ்வாக, ஐ.நா. சபையில் வரும் 27ஆம் தேதி உரையாற்றுகிறார்.
அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து, தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் முதல்முறையாக, வரும் 26ஆம் தேதி முதல் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம், குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏற்படும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. தனது பயணத்தின்மூலம், அமெரிக்காவுடனான உறவை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று பிரதமர் மோடி கருதுகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி முதல் விண்வெளி ஆய்வு வரை பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவுகிறது. பிரதமரின் இந்தப் பயணம், அந்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையின்போது, வணிகம், முதலீடு, எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா ஆகிய 3ஆம் உலக நாடுகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தவுள்ளன என்றார் சையது அக்பருதீன்.
50 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் மொத்தம் 100 மணி நேரம் தங்கியிருக்கவுள்ளார். அப்போது 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். நியூயார்க்கில் 26ஆம் தேதி, நியூயார்க் மேயர் பில்-டி-பிளாசியோ, நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஹார்லோட் எலியட் வார்மோஸ் ஆகியோரை அவர் சந்திக்கிறார்.
ஐ.நா.வில் உரை: 27ஆம் தேதியன்று, நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் 69ஆவது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றுகிறார். அப்போது, ஐ.நா. சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசவுள்ளார்.
ஐ.நா.வின் அமைதிப் பணியில் இந்தியா முக்கிய பங்களிப்பை அளிக்கும் வகையில், பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தவுள்ளார். பின்னர் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கீ மூனை மோடி சந்திக்கிறார். அதேநாளில், அமெரிக்காவின் முன்னணித் தொழிலதிபரும், நியூயார்க் நகர முன்னாள் மேயருமான மிச்செல் புளூம்பெர்க்கைச் சந்தித்து, நவீன நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்குவது தொடர்பான அவரது அனுபவத்தை மோடி கேட்டறியவுள்ளார்.
28ஆம் தேதி, மேடிசன் சதுக்கத்தில் நடைபெறும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வசிக்கும் சுமார் 20,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி பேசுகிறார்.
29ஆம் தேதியன்று, அமெரிக்காவின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்ய மோடி அழைப்பு விடுக்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனையும் மோடி சந்திக்கிறார். அன்று மாலை, வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் மோடிக்கு ஒபாமா சிறப்பு விருந்தளிக்கிறார்.
ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை:
வரும் 30ஆம் தேதி, ஒபாமாவுடன் இருதரப்பு விவகாரம் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பின்னர் 30ஆம் தேதி மாலை, மோடி இந்தியா திரும்புகிறார். இந்தியப் பிரதமர் ஒருவர், அமெரிக்காவில் இதுபோல அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.