ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை

உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

தூத்துக்குடி மற்றும் கூடலூர் நர்சுகள் தினமும் ஊரில் உள்ள குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்தனர். தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் மூலம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தவோ, தொடர்பு கொள்ளவோ முடிய வில்லை. இதனால் அவர்களை மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் திக்ரித் நகரில் இருந்த 46 நர்சுகளை தீவிரவாதிகள் நேற்று திடீர் என்று வேறு இடத்துக்கு வலுக்கட்டாயமாக பஸ்சில் கடத்திச் சென்றனர். இதுபற்றி நர்சுகள் பெற்றோருக்கும் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உதவி கேட்டு கதறினார்கள். ஆனால் அந்தப் பகுதி ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததாலும், தீவிரவாதிகளை அணுக முடியாததாலும் தீவிரவாதிகள் சொல்வதை ஏற்று அவர்களுடன் செல்லுமாறு தூதரக அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.

இதற்கிடையே கடத்தப்பட்ட நர்சுகளின் செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் பெற்றோர் கவலை அடைந்தனர். கடத்தப்பட்ட நர்சுகள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியாமல் இருந்தது. நள்ளிரவுக்குப் பின் அவர்கள் திக்ரித் நகரில் இருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள மொசூல் நகர் அருகே இருப்பதாக தெரியவந்தது. அவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி அனைவரும் பத்திரமாக இருப்பதை உறுதி செய்தனர்.

இன்று காலையில் சி.என்.என். செய்தி நிறுவனம் இந்திய நர்சுகளுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டது. அப்போது இந்திய நர்சுகள் கூறுகையில், ‘‘எங்களை இங்கு தீவிரவாதிகள் நல்ல முறையில் நடத்துகிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தனர். இப்போது எங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, நர்சுகள் கூறியதாவது:–

‘‘எங்கள் அனைவரையும் ஒரு பழைய கட்டிடத்தில் வைத்துள்ளனர். அது ஒரு பழைய கம்பெனி குடோன் போல் இருக்கிறது. அங்குள்ள ஒரு ஹாலில் மொத்தமாக அடைத்து வைத்து இருக்கிறார்கள். இங்கு மின்சாரம் இல்லாத தால் இருட்டாக இருக்கிறது. இந்த இடம் மொசூல் நகருக்கு அருகில் உள்ளது. நாங்கள் பஸ்சில் வரும் வழியில் கிர்கூத் பொது மருத்துவமனை இருந்தது. அதன்பிறகு அல்ஜமூரி மருத்துவமனையை கடந்து பயணம் செய்து வந்தோம். பயணத்தின் போது தீவிரவாதிகள் மென்மையாக நடந்து கொண்டனர்.

உணவு மற்றும் பிஸ்கட்டுகள், குடிநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். என்றாலும் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்’’.

இவ்வாறு தெரிவித்தனர்.

திக்ரித் ஆஸ்பத்திரியில் இந்திய நர்சுகள் இருந்த போது அங்கு குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதில் சிலருக்கு கண்ணாடி சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது. எனவேதான் பாதுகாப்பு கருதி நர்சுகளை வேறு இடத்துக்கு கடத்திச் சென்று வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நர்சுகள் கடத்தல் பற்றி வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது:–

இந்திய நர்சுகள் பத்திரமாக உள்ளனர். சண்டை நடக்கும் பகுதிகளில் சுமார் 100 இந்தியர்கள் சிக்கி இருக்கிறார்கள். எர்பில் நகரில் உள்ள இந்தியர்களும் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்துள்ளனர். நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இந்திய தூதரகத்தில் 1500 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1000 பேருக்கு இந்தியா திரும்ப விமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தீவிரவாதிகளிடம் சிக்கிய தூத்துக்குடி நர்சு லெசிமா ஜெரோஸ் மோனிஷா (25) தினமும் பெற்றோருடன் செல்போனில் பேசி வந்தார். நேற்று முன்தினம் அவர் தீவிரவாதிகள் தங்களை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக தெரிவித்தார். இதனால் தனக்கு பயமாக இருப்பதாக அழுது கொண்டே கூறினார். அவர் பேசி முடிந்தபின்பு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அதன் பிறகு அவர் பெற்றோருடன் பேச வில்லை. இதனால் குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர்.

இதற்கிடையே நர்சுகள் தங்கி இருந்த இடத்திற்கு தீவிரவாதி ஒருவன் வந்து உங்களை விடுதலை செய்ய போகிறோம். 5 நிமிடத்தில் தயாராகுங்கள் என்று கூறி விட்டு சென்றான். அதன்படி தீவிரவாதிகள் 46 நர்சுகளையும் எர்பில் நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதர அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் இந்திய நர்சுகளும் அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்த  இந்தியாவைச் சேர்ந்த 46 செவிலியர்களும், எர்பில் நகர் விமானநிலையத்தில்  இந்திய அதிகாரிகள் மற்றும் ஈராக் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது.

 செவிலியர்கள் அனைவரும் எர்பில் நகர் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொச்சியை வந்தடைவார்கள் என்றும் தூதரக வட்டாரஙகள் தெரிவித்துள்ளன.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *