ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தாழ்வழுத்த கட்டண விகிதத்தைப் பொறுத்தவரை, வீட்டு உபயோகதாரர்கள் (இரண்டு மாதங்களுக்கு) 100 யூனிட் வரை 40 காசுகள், 200 யூனிட் வரை 45 காசுகள், 500 யூனிட் வரை பயன் படுத்துவோருக்கு 200 யூனிட் வரை 50 காசுகள், மீதமுள்ள 300 யூனிட்களுக்கு 60 காசுகள், 500 யூனிட்டுக்கு மேல் பயன் படுத்துவோருக்கு, 500 யூனிட்களுக்கு மேல் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 85 காசுகள் உயர்த்தப்படுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு ரூபாய், பொது வழிபாட்டுத் தலங்கள் 75 காசுகள், குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை 50 காசுகள், அதற்கு மேல் 60 காசுகள், விசைத்தறிகள் இரண்டு மாதத்துக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், 500 யூனிட்டுக்கு மேலானோருக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், அதற்கு மேல் 75 காசுகள், வணிக (கடைகள்) இணைப்புதாரருக்கு 100 யூனிட் வரை 65 காசுகள், அதற்கு மேல் ஒரு ரூபாய் ஐந்து காசுகள் உயர்த்தப்பட உள்ளது.
தற்காலிக மின் இணைப்பு மற்றும் ஆடம்பரச் செலவு இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்த்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 75 காசுகள் உயர்த்தப்படுகின்றன.
உயர் அழுத்தக் கட்டண விகிதத்தில், தொழிற்சாலைகள், ரயில்வே, தனியார் கல்வி நிறுவன இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 72 காசுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ரூபாய் 72 காசுகள், வணிகத்துக்கு ஒரு ரூபாய் ஐந்து காசுகள், தற்காலிக விநியோகத்துக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் மற்றும் விவசாய பம்புசெட்களுக்கு மூன்று ரூபாய் 72 காசுகள் உயர்த்தப்படுகின்றன. இதில் விவசாய பம்புசெட்களுக்கான கட்டணம் முழுமையும் அரசே மானியமாக செலுத்தும்.
இந்த மனு குறித்து அனைத்து விதமான நுகர்வோரும் தங்கள் கருத்துக்களை கடிதங்கள், மனுக்கள் மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வரும் அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்பாக தெரிவிக்கலாம். கருத்து தெரிவிக்க விரும்புவோர் முன்கூட்டியே கடிதங்கள் மூலம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தெரிவித்தால், பின்னர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு நேரில் பேச அழைக்கப்படுவர் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கடும் எதிர்ப்பு
இந்நிலையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வைகோ அறிக்கை:
“மின் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்துவது அக்கிரமம் ஆகும்.மின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக மானியம் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால், அரசின் மானியம் 500 யூனிட் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது வீட்டு உபயோகங்களில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
தடை இல்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான திட்டமிடல் இல்லாத தமிழக அரசு, மின் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்துவது அக்கிரமம் ஆகும். மின்வெட்டால் தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில் நிறுவனங்களும், பெரும் தொழிற்சாலைகளும் உற்பத்தியை இழந்து, நலிவடைந்துவிட்டன. இந்நிலையில், உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு 30 விழுக்காடு மின் கட்டண உயர்வு என்பது தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடிவிடும் நிலைக்குத் தள்ளிவிடும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டம் மற்றும் வருவாய் பற்றாக்குறையை கணக்கிடும்போது, மின்சார விநியோகத்தில் (Distribution) ஏற்படும் கம்பி இழப்பையும் (Transmission loss) பயனீட்டாளர்கள் மீது சுமத்துகிறது. இது நியாயமானது அல்ல.
மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது. ஆனால், 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே இருந்து வந்துள்ளது.
பொதுமக்களின் கருத்துக்களை ஏற்று, மின்சார கட்டண உயர்வை திருப்பப் பெறவும் இல்லை. எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.
ராமதாஸ் அறிக்கை:
அவரது அறிக்கையில்: “கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மின் கட்டணத்தை உயர்த்துவது மக்கள் மீதான இரக்கமற்ற, அரக்கத்தனமான தாக்குதலாகும்.
மின்கட்டண உயர்வு தொடர்பாக விளக்கமளித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மின்கட்டண உயர்வு அறிவிப்புக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி தன்னிச்சையாக இந் நடவடிக்கையை எடுத்திருப்ப தாகவும் தெரிவித்துள்ளார். இது மக்களை முட்டாள்களாக கருதி ஏமாற்றும் செயலாகும்.
மின்னுற்பத்திச் செலவு, மின்வாரியத்தின் கடனுக்கான வட்டி ஆகிய செலவுகளை சமாளிக்கவே மின்கட்டணம் உயர்த்தப்பட விருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓராண்டு இழப்பு ரூ.10,950 கோடியாகவும், ஒட்டுமொத்த இழப்பு ரூ.38,000 கோடியாகவும், கடன் ரூ.40,300 கோடியாகவும் இருந்தது. 17.11.2011 அன்று சுமார் ரூ.10,000 கோடிக்கு மின்கட்டண உயர்வை அறிவித்த ஜெயலலிதா, வெகுவிரைவில் மின்வாரியத்தின் கடன்கள் அடைக்கப்பட்டு லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படுத்தப்படும் என்றார்.
ஆனால், ஆண்டுக்கு ரூ.10,000க்கும் கூடுதலாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரிய ஆண்டு இழப்பு குறையவேயில்லை. அதுமட்டுமின்றி, மின்வாரியத்தின் மொத்தஇழப்பும், மொத்தக்கடனும் தலா ரூ.60,000 கோடியை தாண்டி விட்டன. இதுதான் ஜெயலலிதா அரசு படைத்த சாதனையாகும்.
நிர்வாகத்தை மேம்படுத்தி, ஊழலை ஒழித்திருந்தால் நிச்சயமாக மின்வாரியத்தின் கடனை அடைத்து லாபத்தில் இயங்க வைத்திருக்க முடியும். ஆனால், நிர்வாகத் திறமையின்மையும், ஊழலும் தலைவிரித்து ஆடுவது தான் மின்வாரியத்தின் அவல நிலைக்கு காரணமாகும்.
மின்வெட்டை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.26,000 கோடிக்கு வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்குகிறது. இதில் மட்டும் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை ஊழல் செய்யப்படுவதாக குற்றச்சாற்றுகள் கூறப்படுகின்றன. மின்திட்டங்களை தாமதப்படுத்தியதற்காக அவற்றை ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.7418 கோடி இழப்பீடு வசூலித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்த அளவுக்கு நிர்வாக ஓட்டைகள் மற்றும் ஊழல்கள் தலைவிரித்தாடுவது தான் மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் எனும்போது, அதை சரி செய்யாமல் பொது மக்கள் மீது மின்கட்டண உயர்வு என்ற சுமையை சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும். மாறாக மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்சாரத்திற்காக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாடு கைகட்டி நிற்கும் நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்.