ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விட்டு பொறியியல் மாணவர் தற்கொலை

மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், தீபாவளியன்று அதிகாலை 2.10 மணிக்கு தனது பேஸ்புக் முகவரியில் ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என குறிப்பிட்டு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தீபாவளியன்று ஷேக்முகமது தந்தை அபுதாகிர், தாய் ஷகிலா பேகம், 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை ஹாஜிராபானு ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அன்றைய பொழுதை நண்பர்களுடன் கழித்த ஷேக்முகமது இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ரத்தக் கறைகளுடன் கூடிய ஒரு இளைஞர் ‘மன்னிக்கவும். நான் சாக விரும்புகிறேன்’ என்ற சுவரில் ரத்தத்தால் எழுதிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் புரபைல் படமாக இரவு 10.12 மணிக்கு மாற்றம் செய்தார். மேலும் தன்னுடைய பெயருக்கு கீழே அதிர்ஷ்டமில்லாத நபர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதை நண்பர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 28 பேர் ‘லைக்’ கொடுத்துள்ளனர். அதன்பின் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஷேக்முகமது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. செல்போன் அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்ட நிலையில் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கல்லூரிக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *