பத்திரிகையாளர் ஞாநி ஆம் ஆத்மி’யில் இணைகிறார் : சென்னையில் போட்டி?

மூத்த செய்தியாலரும் அரசியல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர். இந்நிலையில் எழுத்தாளர் ஞாநி , தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ‘தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றியும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருவதாக எழுதி வந்தார்.

அவர் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகைகளில் அரசியல் விமர்சகராக மட்டுமே அரசியலோடு தொடர்புகொண்டிருந்த அவர், இப்போது முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சியின் மூலம் நேரடி அரசியலில் கால் பதிக்கிறார். லோக்சபா தேர்தலில் போட்டி ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று முடிவு செய்யப்படாவிட்டாலும் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் இருவருக்கும் எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதில் மட்டும் உறுதியாக இருக்கிறது.

ஆ.ராசா நீலகிரியில் போட்டியிடும் சூழலில், ஞாநி அங்கு போட்டியிடும் வாய்ப்பு இல்லைதான். ஆகையால், தயாநிதி மாறனை எதிர்த்து களம் இறக்கப்படலாம் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்ரிக்கையாளர், அரசியல் விமர்சகர் ஞாநிக்கு அரசியல் பழக்கமான ஒன்றுதான். ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் அவர்.

பின்னர், இடதுசாரி இயக்கம் சார்ந்த பல மேடைகளில் ஒரு விமர்சகராக, பேச்சாளராக முழங்கியவர். வி.பி.சிங் கட்சியில் போஃபர்ஸ் பீரங்கி ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்ட அவர், அந்தக் காலகட்டத்தில் ராஜீவ் காந்தியை எதிர்த்து வி.பி.சிங் ஜன் மோர்ச்சாவைத் தொடங்கியபோது தமிழகத்தில் அதன் தொடக்க விழாவில் வி.பி.சிங் பேச்சை மொழிபெயர்த்தார். பிறகு தி.மு.க.வும் வி.பி.சிங்கின் ஜனதா தளமும் சேர்ந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும் மேடையில் தலைவர்களின் உரைகளை மொழிபெயர்ப்பவராகச் செயல்பட்டார். பின்னர் சில காலங்கள் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்த ஞாநி இப்போது தீவிர அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார்

Check Also

குஜராத் அரசு இரட்டை வேடம் போடுகிறதா? காஸ் (Gas) விலையை உயர்த்த கோரி எழுதிய கடிதம் – ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட,  காஸ்(Gas) விலையை உயர்த்தக் கோரி குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ஃப்ரேஷன் லிமிட்டெட் (Gujarat State …

Leave a Reply

Your email address will not be published.