பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தின் போது மூலவர், உற்சவர் மற்றும் வினாயகருக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர், துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனம்,  நவவீரர்களுக்கு மேளதாளம் முழங்க காப்புக்கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தலைமைகுருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் செல்வசுப்ரமணியம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் காப்புக்கட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.  சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் காப்புக்கட்டி விரதத்தை துவக்கினர்.

ஒருவார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.  விழா நாட்களில் கோயில்யானை கஸ்தூரி மலைக்கோயிலுக்கு படிவழியாக வந்து சுவாமி புறப்பாட்டின் போது பங்கேற்பது சிறப்பம்சமாகும்.

ஆறாம் நாளான வரும் புதன்கிழமை மலைக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும்.  மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் புரிய மலைக்கொழுந்து அம்மனிடம்  சின்னக்குமாரசாமி வேல்வாங்கும் விழா நடைபெறும். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சுவாமி அடிவாரம் வந்தடைவார்.

மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு மலைக்கோயிலில் சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு அர்த்தஜாமபூஜை நடைபெறும். தொடர்ந்து வியாழக்கிழமை மலைக்கோயிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

காப்புக்கட்டு நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் சுபாஷ், சரவணன், பேஷ்கார்கள் இராமலிங்கம், நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Check Also

இறைவா காப்பாற்று..!

கீரிடம் தரித்த நச்சே! மானுடம் எரித்ததே உன் வீச்சே! அரசனென்ன! ஆண்டியென்ன! ஊரென்ன! உலகென்ன! விலையில்லா உயிர்களையே! கொத்துக் கொத்தாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *