தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்போது வேளாண்மைத் துறைச் செயலாளராக உள்ளார்.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிரவீண்குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் சக்சேனா 1989-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் மத்தியப் பிரதேச மாநிலம், போபால். பல்வேறு இடங்களில் பல பொறுப்புகளை வகித்த சந்தீப் சக்சேனா, இப்போது தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் திங்கள்கிழமை பிறப்பித்தார்.

இப்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாகவுள்ள பிரவீண்குமாருக்கு ஒதுக்கப்படவுள்ள பணியிடம் குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பணியைத் தொடங்கியவர்: தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் சக்சேனா, சேலத்தில் 1990-ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். இதன்பிறகு கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியராக இருந்தார். 1996-97-ஆம் ஆண்டில் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.

அதன்பிறகு, சேலம் ஆட்சியராக 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை, வருவாய், வணிகவரிகள் துறை ஆகியவற்றில் கூடுதல் செயலாளராக 2002-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை பணியில் இருந்தார். தனது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தின் ஆட்சியராகவும் பணியாற்றினார்.

2006-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையில் சர்க்கரைத் துறை ஆணையராகவும், அதன்பிறகு 10 மாதங்கள் தமிழக ஆளுநரின் செயலாளராகவும் இருந்தார். 2008-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் 2011-ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து வேளாண்மைத் துறை செயலாளராக இருந்து வருகிறார்.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளை நன்கு பேசத் தெரிந்த சந்தீப் சக்சேனா, பி.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படித்துள்ளார்.

பருவ மழை பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதம் குறித்தும், அதற்கான நிவாரணம் பற்றிய பணிகளை வேளாண்மைத் துறை செயலாளராக உள்ள சந்தீப் சக்சேனா மேற்கொண்டு வருகிறார். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்துக்குள் அவர் பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தலின்போது, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீண்குமார் எடுத்த நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை எழுப்பின. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து,  தன்னை துறை ரீதியான பணிக்கு மாற்றும்படி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையைத் தொடர்ந்து பிரவீண்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கான பொறுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *