தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரி ஏப்ரல் 24ம் தேதி தேர்தல்

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 தேதிகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடப்பு 15வது லோக்சபா பதவிக் காலம் மே-31 ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று அறிவித்தார். தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஏப்ரல் 30, மே 7ம் தேதிகளில் இரண்டு தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. தெலுங்கானாவில் ஏப்ரல் 30ம் தேதியும், சீமாந்திராவில் மே 7ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. அதே போல ஒடிஸ்ஸாவில் ஏப்ரல் 10ம் தேதியும், 17ம் தேதியும் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் இரண்டு தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது:

நாடு முழுவதும் மொத்த வாக்காளர்கள் 81.4 கோடி பேர் உள்ளனர். கடந்த தேர்தலைவிட இம்முறை 10 கோடி வாக்காளர்கள் அதிகம். நாடு முழுவதும் 9 லட்சத்து 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நாடு முழுவதும் 9-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முறை புகைப்படம் ஒட்டிய பூத் சிலிப்புகள் வழங்கப்படும். இந்த தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

1 வது வாக்குப் பதிவு ஏப்ரல் 7-ந் தேதி 2 மாநிலங்களில் 6 தொகுதிகளுக்கு நடைபெறும்.

2-வது வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ந் தேதி 5 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெறும்.

3வது வாக்குப் பதிவு ஏப்ரல் 10-ந் தேதி 14 மாநிலங்களில் 92 தொகுதிகளுக்கு நடைபெறும்.

4வது வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ந் தேதி 3 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும்.

5வது வாக்குப் பதிவு ஏப்ரல் 17-ந் தேதி 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 122 தொகுதிகளுக்கு நடைபெறும்.

6வது வாக்குப் பதிவு ஏப்ரல் 24-ந் தேதி தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நடைபெறும்.

7வது வாக்குப் பதிவு ஏப்ரல் 30-ந் தேதி 9 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நடைபெறும்.

8வது வாக்குப் பதிவு மே 7-ந் தேதி 7 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு நடைபெறும்.

9வது வாக்குப் பதிவு மே 12-ந் தேதி 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு நடைபெறும்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் மார்ச் 29-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 5ம் தேதி.
  • வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள்.
  • ஏப்ரல் 7ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும்.

ஆலந்தூர் சட்டமன்றத்  தொகுதிக்கு ஏப்ரல் 24ம் தேதியன்றே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Check Also

ஒட்டுப்பதிவு நேரத்தை 1 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு?

மக்களவை தேர்தல் 2014 க்கான வாக்குபதிவு நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *