ரூபாய் நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. 2005ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் நடுவில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.

கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது. இந்நிலையில், புழக்கத்தில் உள்ள, ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத அனைத்து ரூபாய் நோட்டுகளும், வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு வாபஸ் பெறப்படுகின்றன. அதன் பிறகு அந்த நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள்  அவற்றை ஏப்ரல் 1–ந்தேதி முதல், எந்த வங்கியிலும் கொடுத்து, வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது.
இதில் முக்கிய அம்சம் என்னவெனில், வருகிற ஜூலை 1–ந்தேதிக்கு பிறகு, பத்துக்கும் மேற்பட்ட 500 ரூபாய் நோட்டுகளையோ, பத்துக்கும் மேற்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளையோ ஓரே நேரத்தில் மாற்றுவதற்கு புதிய நிபந்தனையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அப்படி மாற்றுபவர்கள், அவர்களின் அடையாளம், முகவரி ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து செல்லுபடி ஆகும். ஏப்ரல் 1–ந்தேதி முதல், அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த பணியில் அனைத்து வங்கிகளும் ஈடுபட வேண்டும்.  ரிசர்வ் வங்கி இவ்வாறு கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி தனது இந்த உத்தரவில், ஆண்டு எண் அச்சிடப்படாத நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கான காரணம் பற்றி எதுவும் கூறவில்லையென்றாலும், கறுப்பு பணத்தை வைத்திருப்பவர்களிடம் இருந்து அதை வெளியே கொண்டு வருவதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படாததால், அவை கள்ள நோட்டு புழக்கத்துக்கு வழிவகுத்து விடுகின்றன. எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், அந்த பழைய நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.