இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவிலேயே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சுதிர் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், புதிய கட்டுப்பாட்டுக்கு செயல்வடிவம் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் அதற்கான செயல்வடிவம் முழுமை பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில அரசால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் இணை ஆசிரியர்களாக பணிக்கு சேர உள்ள தகுதி நிர்ணயத்தை எதிர்த்து, உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் தான் பல்வேறு விவகாரங்கள் அலகாபாத் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.
அவற்றை அடிப்படையாக கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி சுதிர் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அரசு ஆரம்பக் கல்வியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களின் குழந்தைகள், தரமான கல்வியை பெறுவதற்கு தனியார் பள்ளிகளில் அவர்களை சேர்க்கும் வாய்ப்பு உள்ளது என்று அந்த நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.