கொல்கத்தாவுக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி நிமிட பெனால்டி வாய்ப்பு கோலால் சென்னை அணி தோல்வியில் இருந்து தப்பித்து ‘டிரா’ செய்தது.
8 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணி வீரர்கள், தாக்குதல் ஆட்டத்திலும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும் கொல்கத்தாவுக்கு நிகராக கடும் சவால் கொடுத்தனர். இதனால் முதல் நிமிடத்தில் இருந்தே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் அதிர்ஷ்டம் என்னவோ கொல்கத்தா பக்கம் தான் இருந்தது.
35-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் முகமது ரபி பந்துடன் கோல் பகுதியை நெருங்கிய போது, சென்னையின் கோல் கீப்பர் ஷில்டான் பால் பந்தை பாய்ந்து தடுத்தார். அப்போது அவரது கால் பட்டு முகமது ரபி கீழே விழுந்தார். இதனால் சென்னை கோல் கீப்பர் ஷில்டானுக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றிய நடுவர், கொல்கத்தாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். பெனால்டி வாய்ப்பில் கொல்கத்தா வீரர் லூயிஸ் கார்சியா எளிதாக கோல் அடித்தார்.
இதன் பின்னர் ஒரு வீரர் குறைவாக 10 வீரர்களுடன் விளையாடிய போதிலும் சென்னை அணியின் உத்வேகமும், ஆக்ரோஷமும் தளரவில்லை. சென்னை முன்னணி வீரர்கள் பெர்னர்ட் மென்டி, இலனோ, மென்டோசா களத்தில் பம்பரமாக சுழன்றனர். ஆனால் பலன் தான் கிடைக்கவில்லை.
47-வது நிமிடத்தில் ‘பவுல்’ செய்த கொல்கத்தா வீரர் ஜோப்ரே 2-வது முறையாக மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார். 2-வது மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம். இதனால் அவரும் வெளியேற்றப்பட்டதால் கொல்கத்தாவும் 10 வீரர்களுடன் ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
ரசிகர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் பதிலடி கொடுக்க தொடர்ந்து வரிந்து கட்டிய சென்னை அணியினர் இலக்கை நோக்கி 9 முறை ‘ஷாட்’ அடித்த போதிலும் அவை ஏதாவது ஒரு வகையில் முறியடிக்கப்பட்டன.
இதனால் கொல்கத்தா அணி வெற்றியின் விளிம்புக்கு சென்றது. வழக்கமான ஆட்டம் நேரமான 90 நிமிடங்கள் முடிந்து காயம் உள்ளிட்ட விரயத்திற்காக 4 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இந்த கடைசி நேரத்தில் சென்னை அணி மீது அதிர்ஷ்ட காற்று வீசியது.
கொல்கத்தா வீரர் கிங்சுக் பலமாக உதைத்ததில் சென்னை வீரர் வலேன்சியா கீழே விழுந்து வலியால் துடித்தார். இதையடுத்து கிங்சுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் இலனோ கோல் அடிக்க, மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது. திரிலிங்கான இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் கோல் போட்டு வரும் சென்னை வீரர் இலனோ (பிரேசில் நாட்டவர்) இதுவரை 6 கோல்கள் அடித்து முதலிடம் வகிக்கிறார்.
கொல்கத்தா முதலிடம்
5-வது லீக்கில் ஆடிய சென்னையின் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியான கொல்கத்தா 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 டிரா என்று 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது.
இன்றிரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.