உலக சாதனை: இமாலய சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார்.

3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது முதல் போட்டியிலேயே இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். 150 ஆண்டுகால பாரம்பரியமிக்க கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினார் ரோஹித் சர்மா. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டிய ரோஹித் சர்மா, 72 பந்துகளில் அரைசதம் கண்டார். பின்னர் வேகம் காட்டிய அவர், 100 பந்துகளில் தனது 5-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அதிரடி வேகம்

சதமடித்த பிறகு வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்ட ரோஹித் சர்மா, அடுத்த 25 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த 26 பந்துகளில் (ஒட்டுமொத்தத்தில் 151 பந்துகள்) தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை நிறைவு செய்தார். அப்போது ரசிகர்களின் கரவொலியால் ஈடன் கார்டன் மைதானமே அதிர்ந்தது.

தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ரோஹித் சர்மா, 220 ரன்களை எட்டியபோது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான இந்திய வீரர் சேவாக்கின் சாதனையை (219 ரன்கள்) முறியடித்தார். இதன்பிறகு தொடர்ந்து வேகமாக ஆடிய அவர் 166 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். அவர் 200-லிருந்து 250 ரன்களை எட்டுவதற்கு 15 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பவுண்டரியிலும் சாதனை

173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 33 பவுண்டரிகளை விளாசியதன் மூலம் ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகளை விளாசியவர் என்ற உலக சாதனையையும் படைத்தார். முன்னதாக சச்சின், சேவாக் ஆகியோர் தலா 25 பவுண்டரிகளை விளாசியதே சாதனையாக இருந்தது.

ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர் (16) என்ற சாதனையும் ரோஹித் சர்மா வசமே உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதமடித்தபோது அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை படைத்தார்.

‘மேலும் 50 ஓவர் ஆட தயாராக இருந்தேன்’

“எப்போதும் சிந்தித்து ஆட வேண்டும். அணியின் ஸ்கோருக்கு உகந்ததுபோல நம்முடைய இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டும். அணி இதுவரை எவ்வளவு அடித் துள்ளது, இன்னும் எத்தனை ஓவர்கள் வீசவேண்டும், பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஓவர்கள் மீதம் உள்ளன என்று கணக்குப் போட்டுத்தான் ஆடவேண்டும். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்ததால் நல்ல தொடக்கத்தை இழக்க விரும்பவில்லை. இது போன்ற பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்களில் 300, 350 ரன்களைக்கூட சுலபமாக சேஸ் செய்துவிடமுடியும். அதனால் பெரிய ஸ்கோர் அவசியம் என்று நினைத்தோம். ஒரு இடைவெளிக்குப் பிறகு ஆடியதால் மேலும் 50 ஓவர்கள் ஆட தயாராக இருந்தேன்” என்றார் ரோஹித் சர்மா.

ரோஹித் உலக சாதனையை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசி உலகசாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் 2-வது இரட்டை சதம் எடுத்ததோடு, சேவாகின் 219 ரன்கள் உலக சாதனையை முறியடித்து, முதன் முதலாக 250 ரன்களுக்கும் மேல் குவித்து 3 சாதனைகளை நிகழ்த்திய ரோஹித் சர்மாவுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

கேப்டன் தோனி:
மிகச்சிறப்பாக ஆடினாய் ரோஹித், இதுதான் அனைவருக்குமான ரோஹித் சர்மா. முழுத்திறமை.. அருமையான இன்னிங்ஸை மகிழ்வுடன் பார்த்து ரசித்தேன்.

ரவீந்திர ஜடேஜா தனக்கேயுரிய பாணியில்: ரோஹித் சர்மா, கடவுள் ராமருக்குப் பிறகு இலங்கைகு எதிராக சிறந்த இத்தகைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹர்பஜன் சிங்: இந்த சாதனை நிலைத்து நிற்கும். பார்க்க மிகவும் அபாரமாக இருந்த இன்னிங்ஸ். வரலாறு உருவாக்கியதற்காக பாராட்டுக்கள்.

அனில் கும்ளே: அடுத்த இலக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம். எதுவும் முடியும் (அவரால்), இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: நல்ல பேட்டிங் பிட்ச், வெகு சாதாரணமான பந்துவீச்சு, என்ற பேச்செல்லாம் நிலைக்காது, 173 பந்துகளில் 264 ரன்கள் என்பது சாதாரணமானடு அல்ல.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்:
முச்சதம் எடுக்கவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 2 ஒருநாள் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். என்னால் ஒரு சதம் கூட எடுக்க முடியவில்லை. யூஸ்லெஸ்.

இவ்வாறு அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தோல்வி

இலங்கை அணி ரோஹித் சர்மாவின் ஸ்கோரையாவது தாண்டுமா என்று பலரும் சந்தேகப்பட்ட நிலையில், களத்தில் இறங்கினார்கள் குசால் பெரேராவும் தில்ஷனும்.

முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பெரேரா உமேஷ் யாதவின் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். அதன்பிறகு 6வது ஓவரின் முடிவில் பின்னியின் பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சன்டிமல். அதிக ரன்கள் அடித்து உலக சாதனை செய்த ரோஹித் சர்மா சோர்வாக காணப்படுவார் என்று பார்த்தால், அவர் உற்சாகமாக ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். 9வது ஓவரில் ஜெயவர்தனே 2 ரன்னில் அவுட் ஆக, அடுத்த ஓவரில் தில்ஷான் 34 ரன்களில் ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது இலங்கை அணி.

14வது ஓவரிலிருந்து ஸ்பின்னர் கரண் சர்மா பவுலிங் செய்தார். 22 ஓவர் வரை இலங்கை விக்கெட் இழக்காமல் இருந்ததால் அக்‌ஷர் படேலை அழைத்தார் கோலி. அதற்குப் பலனும் கிடைத்தது. மேத்யூஸ் 75 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஷர் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மேத்யூஸ் அவுட் ஆனபிறகு ஜோடி சேர்ந்த திரிமானியும் திசாரா பெரேராவும் அடித்து ஆட ஆரம்பித்தார்கள். கரண் சர்மாவின் 8வது ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்டன (3 சிக்ஸர்கள்). கடைசியில் இருவருமே 37-வது ஓவரில் குல்கர்னியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். திரிமானி 59 ரன்கள் எடுத்தார். குல்கர்னி தனது அடுத்த ஓவரிலும் மீண்டும் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 233 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து தோல்வி உறுதியான நிலையில், ரோஹித் சர்மாவின் ஸ்கோரை இலங்கை தொட்டுவிடக்கூடாதே என்று ரசிகர்கள் திடீரென பரபரப்பானார்கள். இறுதியில் ரோஹித்தின் தனிப்பட்ட ஸ்கோரைக்கூட தாண்டமுடியாமல் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. இந்திய அணியில் குல்கர்னி 4 விக்கெட்டுகளை எடுத்தார். யாதவ், பின்னி, படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *