ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி முதலிடம் பிடித்தது

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.

இந்திய அணிக்கு முதலிடம்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

இலங்கை–இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பு 113 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் இருந்த இந்திய அணி தொடரை 5–0 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ செய்ததன் மூலம் மொத்தம் 117 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு

தென் ஆப்பிரிக்க அணி 115 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு இறங்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் 3–வது இடத்துக்கு சரிவு கண்டு இருக்கிறது. இலங்கை அணி 108 புள்ளிகளுடன் 4–வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 107 புள்ளிகளுடன் 5–வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 98 புள்ளிகளுடன் 6–வது இடத்திலும், நியூசிலாந்து அணி 96 புள்ளிகளுடன் 7–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 96 புள்ளிகளுடன் 8–வது இடத்திலும், வங்காளதேச அணி 69 புள்ளிகளுடன் 9–வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி 58 புள்ளிகளுடன் 10–வது இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா–ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. எஞ்சிய ஆட்டங்களின் முடிவை பொறுத்து இரண்டு அணிகளில் ஒன்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை–இங்கிலாந்து தொடர்

இதேபோல் வருகிற 26–ந் தேதி தொடங்கும் இலங்கை–இங்கிலாந்து அணிகள் இடையேயான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முடிவு தர வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *