கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது.
அடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது கட்சியில் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புதிய வழிகளில் நிதி வசூல் செய்ய ஆம்ஆத்மி தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
வரும் 15–ந்தேதி கெஜ்ரிவால் பெங்களூர் வருகிறார். அன்று அவருடன் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
இந்த நிதி வசூல் மூலம் ரூ. 40 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடெங்கும் இதே பாணியில் நிதி வசூல் செய்ய ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் சென்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் தனி விமானத்தில் செல்வதை விமர்சனம் செய்து வந்த கெஜ்ரிவாலே தனி விமானத்தில் சென்றது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், தன்னை ஒரு விழாவுக்கு அழைத்தவர்கள் தனி விமானத்தில் கூட்டி சென்றதாக கூறியுள்ளனர்.